ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் சந்திப்பு

ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-09-26 21:54 IST

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக-பாஜக கூட்டணி தற்போதைக்கு அமைந்துள்ளது.

இந்த கூட்டணி எதிரொலியாக ஏற்கெனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதலில் அக்கூட்டணியில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து அமமுக அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.

இதற்கிடையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து அவரது கட்சிப்பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டன. இருப்பினும் செங்கோட்டையன், டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், சென்னை நந்தனத்தில் நடைபெற்ற விஐடி விஸ்வநாதன் வீட்டு திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வம்-டிடிவி.தினகரன் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்த இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் விசாரித்து கொண்டனர். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி.தினகரன் அருகருகே அமர்ந்து சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் உரையாடினர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்