2 கிராம் மோதிரத்திற்காக முதியவர் அடித்துக் கொலை - 2 வாலிபர்கள் கைது

கோவிலுக்கு சென்ற முதியவர் 2 கிராம் மோதிரத்திற்காக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-11-18 05:41 IST

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள குடியாந்தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் மன்னார்சாமி (89 வயது). இவர் காலையில் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி கடந்த 13-ந்தேதி காலையில் அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து தூசி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் மன்னார்சாமியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அம்மன் கோவில் அருகே உள்ள புதரில் அவர் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பிரதே பரிசோதனை செய்ததில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (19 வயது), தினேஷ் (25 வயது) ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மன்னார்சாமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கேயே அமர்ந்திருந்த மன்னார்சாமியை நோட்டமிட்ட அவர்கள் இருவரும் முதியவர் மன்னார்சாமி கையில் அணிந்திருந்த 2 கிராம் மோதிரத்தை பறிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக அவரை அருகில் உள்ள புதருக்கு அழைத்து சென்று தாக்கி படுகொலை செய்து, மோதிரத்தை பறித்து சென்றதாக அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தினேஷ், பிரவீன்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்