அண்டை மாநிலங்களுக்கு இயக்கும் ஆம்னி பஸ்கள் நிறுத்தம்; ரூ.22 கோடி இழப்பு
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் 150 ஆம்னி பஸ்கள், கடந்த 10 நாட்களாக இயக்காமல் நிறுத்தப்பட்டது.;
சென்னை,
தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு கடந்த 7-ந்தேதி சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களில், தமிழகத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை கேரள போக்குவரத்து துறை அதிகாரிகள், சிறைப்பிடித்து ரூ.70 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதித்தனர்.
இதேபோன்று கர்நாடக போக்குவரத்து துறையும் தமிழக பதிவு எண் கொண்ட 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை தடுத்து, ஒவ்வொரு பஸ்களுக்கும் ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதித்து, ரூ.1.15 கோடி வரை வசூலித்துள்ளது. இதற்கு அண்டை மாநிலங்கள் கூறும் காரணம் கடந்த 2021-ம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட்'படி தமிழகத்தில் இன்று வரை அண்டை மாநில பஸ்களுக்கு சாலை வரி வசூலிக்கிறார்கள், எனவே நாங்களும் வசூலிக்கிறோம் என தெரிவிக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து, கடந்த 7-ந்தேதி முதல் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் 150 ஆம்னி பஸ்கள், கடந்த 10 நாட்களாக இயக்காமல் நிறுத்தப்பட்டது. இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து பாதிப்படைந்து, தமிழகத்திலிருந்து அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழக பயணிகளும் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 10-ந்தேதியில் இருந்து மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பஸ்களும் இயக்காமல் கடந்த 8 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் 600-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் தங்களுக்கு ரூ.22 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா, கர்நாடக மாநில அரசுகளுடன் பேசி, அந்த மாநில பஸ்களுக்கும் சாலை வரியில் விலக்களித்து அண்டை மாநிலங்களுக்கும் சீராக பஸ்கள் இயக்க வழி வகையை ஏற்படுத்த வேண்டும். சுமுகமான தீர்வு கிடைக்கும் வரையில் வெளி மாநிலங்களுக்கான 600 ஆம்னி பஸ்களை இயக்குவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 8 நாட்களாக மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பஸ்கள் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் தினசரி 10 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே முதல்-அமைச்சர் தலையிட்டால் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அ.அன்பழகன் கூறினார்.