ஆன்லைன் லாட்டரியால் விபரீதம்.. லட்சக்கணக்கில் பணத்தை இழந்து திருடனாக மாறிய ஆசிரியர்
லாட்டரியில் இழந்தை பணத்தை பெறுவதற்காக நண்பருடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.;
கோப்புப்படம்
விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அடுத்த வடநெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த 9-ந் தேதி மர்ம நபர்கள் இவரது வீட்டில் புகுந்து 12.5 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர். குறிப்பாக சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் மணிகண்டன் வீ்ட்டில் புகுந்து நகைகளை கொள்ளையடித்தது அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் சிவக்குமார் (26), ஏந்தூர் கிராமத்தை சேர்ந்த சிவங்கர் மகன் பிரவீன்குமார் என்பது தெரியவந்தது. பட்டதாாி ஆசிரியரான சிவகுமார் ஆன்லைன் லாட்டரியில் சுமார் ரூ.20 லட்சத்துக்கு மேல் பணத்தை இழந்துள்ளார். லாட்டரியில் இழந்தை பணத்தை பெறுவதற்காக பிரவீன்குமாருடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து சிவக்குமார் உள்பட 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 13 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.