ஊட்டி மலை ரெயில் 5-வது நாளாக இன்றும் ரத்து

ஊட்டி மலை ரெயில் 5-வது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-10-23 10:28 IST

ஊட்டி,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கடந்த 18-ந் தேதி இரவு பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் கல்லாறு-ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் பாறாங்கற்கள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன. அத்துடன் ரெயில் பாதையோரத்தில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து குறுக்கே விழுந்தன. இதன் காரணமாக 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 4 நாட்கள் ஊட்டி மலைரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

மலை ரெயில் இருப்புப்பாதை சீனியர் செக்சன் என்ஜினீயர் மேற்பார்வையில் ரெயில்வே தொழிலாளர்கள் மலை ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர். சேதமடைந்த தண்டவாளங்கள் மற்றும் ராக்பார்கள் அகற்றப்பட்டு அவற்றிற்கு பதிலாக புதிதாக தண்டவாளம் மற்றும் ராக்பார்கள் பொருத்தப்பட்டன.

இந்த பணிகள் முடிவடையாததால் இன்றும் 5-வது நாளாக மலைரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்த பின்னர் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்