கல்லணையில் தண்ணீர் திறப்பு; பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.;
தஞ்சாவூர்,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக தஞ்சாவூர் சென்றுள்ளார். முன்னதாக தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் கல்லணைக்கு இன்று வந்து சேர்ந்தது. இந்த நிலையில் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இது தொடர்பாக தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கிப் பிறங்கு நிலைமாடத்து உறந்தை போக்கி" எனப் பட்டினப்பாலை பாடும் கரிகாற்பெருவளத்தான் உருவாக்கிய கல்லணையில் நீர் திறக்கப்பட்டது! பொன்மணியென நெல்மணி விளைந்திடப் புறப்பட்ட பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்! உழவர் பெருமக்கள் வளம் காணட்டும்!"
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.