‘தமிழக மக்களே தி.மு.க.வை மன்னிக்காதீர்கள்’ - அன்புமணி ஆவேசம்
ஊழலில் இந்தியாவிலேயே முதல் இடத்தில் தி.மு.க. உள்ளது என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.;
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
“இந்த ஊழல் தி.மு.க. ஆட்சியை விரட்டி அடிப்போம், வீட்டுக்கு அனுப்புவோம் என்று இங்கே அனைவரும் வந்திருக்கிறோம். தி.மு.க. ஆட்சி முடிவுக்கு இன்று தொடக்கம். தி.மு.க. அரசு என்றாலே ஊழல் அரசு, கொடுங்கோல் ஆட்சி, பூஜ்ஜியம் ஆட்சி.
கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீர்வளத் திட்டம் பூஜ்ஜியம், மருத்துவ கல்லூரி பூஜ்ஜியம், புதிய மின் திட்டம் பூஜியம். இப்படி எல்லாவற்றிலும் பூஜ்ஜியம்.
தகுதி, திறமை, நேர்மை இல்லாதது தி.மு.க. ஆனால், ஊழலில் மட்டும் இந்தியாவிலேயே முதல் இடத்தில் தி.மு.க. உள்ளது. மணல் கொள்ளை, நகராட்சி துறையில் ஊழல், பணியிட மாற்றத்தில் ஊழல், டாஸ்மாக் ஊழல், வரி ஏய்ப்பில் ஊழல், கனம ஊழல், நெல் கொள்முதலில் ஊழல் என இப்படி ஒவ்வொரு துறையிலும் ஊழல். இப்படி, ரூ.6 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளனர். இவர்களை துரத்தி அடியுங்கள்.
வாயை திறந்தாலே பொய். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதில் 66 வாக்குறுதிகள்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தமாக பார்த்தால் 13 சதவீதம்தான். இது வெட்கக்கேடு. பரீட்சையில் 35 மதிப்பெண்கள் எடுத்தால்தான் பாஸ். 13 மார்க் எடுத்தால் பெயில். அப்படி பார்த்தால், பெயிலான கட்சி தி.மு.க.
தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது. 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து, நகைக்கடன் ரத்து, கூட்டுறவுக் கடன் ரத்து என்று எத்தனையோ அறிவிப்புகளை வெளியிட்டார்கள். நேற்று கூட, ரூ.12 லட்சத்து 16 ஆயிரம் கோடி தொழில் முதலீடு வநந்துவிட்டதாக மிகப்பெரிய பொய்யை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
உண்மையில் வந்தது ரூ.1 லட்சம் கோடிதான். தமிழக மக்களே தி.மு.க.வை மன்னிக்காதீர்கள். இளைஞர்களை அழித்துக்கொண்டிருக்கின்ற தி.மு.க.வை அகற்றுங்கள்.”
இவ்வாறு அவர் பேசினார்.