ஓடும் ரெயிலில் ஐ.டி. பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது
முன்பதிவு செய்த பெட்டியில் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார்.;
சேலம்,
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்டிரலுக்கு சேலம் வழியாக தினமும் திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12624) இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ரெயில் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது.
இந்த ரெயிலில் முன்பதிவு செய்த பெட்டி ஒன்றில் 25 வயதுடைய கேரள மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த ரெயில் சேலம் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பெட்டியில் பயணம் செய்த முதியவர் ஒருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு வந்து அந்த முதியவரை பிடித்து சேலம் ஜங்ஷன் ரெயில்வே போலீசிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருவள்ளூரை சேர்ந்த அருளானந்தம் (வயது 63) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஓடும் ரெயிலில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.