போகிப்பண்டிகை: சென்னையில் 8 விமானங்கள் ரத்து - 7 விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு

சென்னையில் பழைய பொருட்களை தெருக்களில் போட்டு எரித்ததால் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.;

Update:2026-01-14 08:54 IST

சென்னை,

போகிப்பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள மீனம்பாக்கம், கவுல்பஜார், பொழிச்சலூர், பம்மல், அனகாபுத்தூர், தரைப்பாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் அதிகாலையிலேயே பழைய பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள் உள்ளிட்ட பழைய பொருட்களை தெருக்களில் போட்டு எரித்ததால் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.

பனி மூட்டத்துடன் புகையும் சேர்வதால் விமான நிலைய ஓடுபாதையே தெரியாத அளவுக்கு மாறிவிடுவதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து இன்று காலை 7.15 மணிக்கு மும்பை செல்லும் விமானம், காலை 8 மணிக்கு டெல்லி செல்லும் விமானம், அதிகாலை 3.05 மணிக்கு புனே செல்லும் விமானம், காலை 6.35 மணிக்கு கோவை செல்லும் விமானம் என 4 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு்ள்ளன.

இதேபோல் சென்னைக்கு அதிகாலை 5.20 மணிக்கு வர வேண்டிய டெல்லி விமானம், காலை 6.35 மணிக்கு வரவேண்டிய மும்பை விமானம், காலை 7.10 மணிக்கு வரவேண்டிய புனே விமானம், காலை 9.10 மணிக்கு வரவேண்டிய கோவை விமானம் என 4 வருகை விமானங்களும் என 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

அதேபோல் சென்னையில் இருந்து காலை 5.40 மணிக்கு விஜயவாடா செல்ல வேண்டிய விமானம் 3 மணி நேரம் தாமதமாக காலை 8.40 மணிக்கும், காலை 6 மணிக்கு தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானம் 3 மணிநேரம் தாமதமாக காலை 9.05 மணிக்கும், அதிகாலை 3 மணிக்கு அபுதாபி செல்ல வேண்டிய ஏர் அரேபியா விமானம், அதிகாலை 3.50 மணிக்கும், பக்ரைன் செல்ல வேண்டிய கல்ப் விமானம் காலை 4.50 மணிக்கும், காலை 9.35 மணிக்கு மலேசியா செல்ல வேண்டிய ஏர் ஏசியா விமானம் காலை 10.15 மணிக்கும்,

அதிகாலை 2.10 மணிக்கு அபுதாபி செல்ல வேண்டிய எத்தியாட் விமானம் அதிகாலை 3.15 மணிக்கும், காலை 9.30 மணிக்கு அபுதாபி செல்ல வேண்டிய எத்தியாட் விமானம் காலை 10.25 மணிக்கும் புறப்பட்டு செல்லும் வகையில் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விமானங்கள் தவிர மேலும் பல விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து ஆகலாம் என்றும், அது குறித்து அந்தந்த ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அறிவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்