ஸ்கூட்டரில் புகுந்த விஷ பாம்பு.. லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் திடீரென விஷப்பாம்பு ஸ்கூட்டருக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.;
சேலம்,
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி எல்லைக்குட்பட்ட வெள்ளாண்டி வலசு பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 55). வாகனங்கள் விற்பனை செய்து வரும் இவர் நேற்று எடப்பாடி பஸ் நிலையம் அருகில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சாப்பிடுவதற்காக வந்திருந்தார். அவர் கடை வாசலில் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு கடைக்கு உள்ளே சென்றிருந்தார்.
இந்த நிலையில் அங்கு திடீரென தரையில் ஊர்ந்து வந்த பாம்பு ஒன்று முத்துவின் ஸ்கூட்டருக்குள் புகுந்ததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அலறி அடித்து கூச்சலிட்டனர். இது குறித்து எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராடி ஸ்கூட்டருக்குள் பதுங்கி இருந்த விஷ பாம்பை பிடித்தனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் திடீரென விஷப்பாம்பு வந்து ஸ்கூட்டருக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.