காவலர்கள் பதவி உயர்வு: அரசாணையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் - திருமாவளவன்

2002 முதல் பணியில் சேர்ந்த காவலர்கள் பதவி உயர்வு பெற தக்க வகையில் புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.;

Update:2025-06-21 18:53 IST

கோப்புப்படம் 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு காவல்துறையில் 2002-ம் ஆண்டு முதல் 2010 வரை காவலர்களாக பணியில் சேர்ந்தவர்கள் பதவி உயர்வைப் பெறுவதில் சிக்கல் உருவாகியுள்ளது. பதவி உயர்வு பெறுவதற்கான கால வரம்புகள் தமிழ்நாடு அரசால் தற்போது திருத்தம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 13-ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அந்த அரசாணையின்படி 2011-ம் ஆண்டிற்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்கள், முதல்நிலை காவலர் மற்றும் தலைமைக் காவலர் ஆகிய பதவி உயர்வைப் பெற்றுள்ளனர்.

முதல்நிலை காவலர்கள் தலைமைக் காவலர்களாக பதவி உயர்வு பெறுவதற்கு ஏற்கனவே இருந்த கால வரம்பான ஐந்து ஆண்டுகள் என்பதை மூன்று ஆண்டுகள் என குறைத்துள்ளது. இந்த ஒரே ஒரு திருத்தத்தை அல்லது தளர்வை மட்டுமே தமிழ்நாடு அரசு இந்த அரசாணை மூலம் செய்துள்ளது. இதுவும் 2011-ம் ஆண்டிற்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்கள் மட்டுமே பயன் பெற முடியும் என்ற நிலை உள்ளது. 2002-ம் ஆண்டிலிருந்து 2010-ம் ஆண்டு வரையுள்ள காலகட்டத்தில் பணியில் சேர்ந்தவர்கள் பயன்பெற முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 37,000 காவலர்கள் இதன்மூலம் பாதிக்கப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக தற்போதைய அரசாணையின்படி 23 ஆண்டுகள் பணியாற்றிவர்கள் யாரும் சிறப்பு சார் -ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற முடியவில்லை. எனவே, இந்த அரசாணை கடைநிலையில் பணியாற்றும் காவலர்களை வஞ்சிப்பதாகவே அமைந்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு தற்போதைய அரசாணையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். 2002-ம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்தவர்கள் உட்பட 10-03-10 ஆகிய கால வரம்பின்படி முறையே பணியாற்றியவர்கள் பதவி உயர்வுகளைப் பெறுவதற்கு ஏற்ப புதிய அரசாணையைப் பிறப்பிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதல்-அமைச்சரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்