நெல்லையப்பர் கோவில் தேருக்கு போலீஸ் பாதுகாப்பு
நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.;
நெல்லை,
நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் ஆனி பெருந்திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூலை மாதம் 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.
இதற்கு முன்னோட்டமாக புட்டாரத்தி அம்மன் கோவில் திருவிழா முடிந்து விட்டது. அதை தொடர்ந்து தற்போது விநாயகர் திருவிழா நடைபெற்று வருகிறது. தேரோட்டத்திற்கு தேவையான முன்னேற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி நெல்லை டவுன் கிழக்கு ரத வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் தேர்களை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பாதுகாப்பு தட்டிகளை அகற்றி தேர்களுக்கு சாரம் கட்டும் பணி மற்றும் அலங்கரிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இதுதவிர சண்டிகேஸ்வரருக்கு புதிதாக தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருவிழா நெருங்கி வருவதாலும், தேர்கள் திறந்த நிலையில் இருப்பதாலும் சுவாமி, அம்பாள் தேர்களின் அருகில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நெல்லையப்பர் கோவில் திருவிழா மற்றும் தேரோட்டத்தின் போது பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.