கோபியில் செங்கோட்டையன் வீட்டுக்கு போடப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
2 போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.;
கோபி,
கோவை மாவட்டம் அன்னூரில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி விவசாயிகள் சார்பில் அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அப்போது அங்கு வைக்கப்பட்ட பாராட்டு விழா பேனர்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம் பெறவில்லை எனக்கூறி விழாவை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்தார். இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 11-ந் தேதி முதல் ஈரோடு மாவட்டம் கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது தோட்டத்து வீட்டின் முன்பு தமிழக அரசு சார்பில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 2 போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்னையில் விஜய்யை சந்தித்து த.வெ.க.வில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு த.வெ.க. சார்பில் கடந்த 29-ந் தேதி முதல் வடமாநில பவுன்சர்கள் 2 பேர் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டனர். அவர்கள் கே.ஏ.செங்கோட்டையனுக்கு தொடர்ந்து பாதுகாப்பாக இருந்து வருகிறார்கள். இதனிடையே கே.ஏ.செங்கோட்டையன் வீட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு நேற்று முதல் வாபஸ் பெறப்பட்டது.