பெண் தேர்வர்களை ஜீப்பில் அழைத்து சென்று ஜெராக்ஸ் எடுக்க உதவிய போலீசார் - தேர்வு மையத்தில் நெகிழ்ச்சி
பதற்றமடைந்த 2 பெண் தேர்வர்களுக்கு காவலர்கள் உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் இன்று காவல்துறையில் 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 45 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுதுவதற்கு 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில், தேர்வு எழுத வந்தவர்களை காவலர்கள் பரிசோதனை செய்து தேர்வு எழுதும் மையத்திற்கு அனுப்பி வைத்தனர். சென்னையில் உள்ள 10 தேர்வு மையங்களில் 9,915 பேர் தேர்வு எழுதினர்.
முன்னதாக தேர்வு எழுத வருபவர்கள் ஹால் டிக்கெட், புகைப்பட அடையாள அட்டை மற்றும் கருமை நிற பேனா ஆகியவற்றை கட்டாயமாக எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், புளூடூத் ஹெட்போன் உள்ளிட்டவற்றை எடுத்துவர அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை முத்தியால்பேட்டையில் உள்ள தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத வந்த 2 பெண் தேர்வர்கள் தங்கள் அடையாள அட்டைகளை ஜெராக்ஸ் எடுக்காமல் வந்துள்ளனர். இதனால் அந்த தேர்வர்கள் இருவரும் பதற்றமடைந்து செய்வதறியாது திகைத்து நின்றனர். அப்போது அங்கிருந்த காவலர்கள் உடனடியாக காவல்துரை ஜீப்பில் 2 பெண்களையும் அழைத்துச் சென்று, ஜெராக்ஸ் எடுக்க உதவினர்.
பின்னர் அவர்கள் இருவரையும் மீண்டும் தேர்வு மையத்திற்கு ஜீப்பில் அழைத்து வந்தனர். இதையடுத்து அந்த 2 பெண் தேர்வர்களும் காவலர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு தேர்வு எழுதச் சென்றனர். இந்த சம்பவம் தேர்வு மையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.