தூத்துக்குடியில் வாகனங்களுக்கு தீ வைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி, தெற்கு புதுத்தெரு பகுதியில் ஒரு வளாகத்தில் நிறுத்தியிருந்த வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர்.;
தூத்துக்குடி, தெற்கு புதுத்தெரு பகுதியில் ஒரு வளாகத்தில் 13 வீடுகள் உள்ளன. இங்கு குடியிருப்பவர்கள் தங்கள் வாகனங்களை வளாகப் பகுதியில் நிறுத்துவது வழக்கம். அதன்படி கடந்த 23ம் தேதி இரவு வாகனங்களை நிறுத்தியுள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் வாகனங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர்.
இருப்பினும் 2 பைக்குகள் முழுமையாகவும், 6 வாகனங்கள் பாதியளவும், ஒரு மிதிவண்டி முழுமையாகவும் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்த புகாரின்பேரில், தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர்கள் 2 பேர் வாகனங்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பது தெரிய வந்தது. தொடர்ந்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.