கவர்னர் ஆர்.என்.ரவி, மார்க்ஸை விமர்சிப்பதற்கு தகுதியற்றவர் - இந்திய கம்யூ. கட்சி கண்டனம்

கார்ல் மார்க்ஸை பின்பற்றியவர்கள் இந்திய கலாசாரத்தை அழித்துவிட்டனர் என்ற கவர்னரின் கருத்து கண்டனத்திற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.;

Update:2025-11-26 22:02 IST

கோப்புப்படம் 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நேற்றைய தினம் கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, கார்ல் மார்க்ஸை பின்பற்றியவர்கள் இந்திய நாகரிகம், கலாச்சாரத்தை அழித்துவிட்டனர் என்று அநாகரிகமாக பேசியுள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையையும், பல மொழிகள் பேசும் மக்களின் கலாச்சாரத்தையும் அழித்தொழிக்க முயலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சித்தாந்தத்தை பின்பற்றும் ஆர்.என்.ரவி இத்தகைய குற்றச்சாட்டை கார்ல் மார்க்ஸ் மீது வைத்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

காரல் மார்க்சுக்கு எதிரான வெறுப்பை தொடர்ந்து கக்கிவரும் கவர்னர் ஆர்.என்.ரவி, கம்யூனிச எதிர்ப்பு பித்தம் தலைக்கேறியவராய் உண்மைக்கு மாறான கருத்துகளை உளறி கொட்டிக் கொண்டிருக்கிறார். கார்ல் மார்க்ஸ் தனது மூலதன நூலில் “ஏகாதிபத்திய கொள்கைக்கு நான் எதிரானவன். ஆனால், இந்தியாவுக்கு ஏகாதிபத்தியம் தேவை” என்று குறிப்பிட்டிருக்கிறார் என ஆர்.என்.ரவி கூறியுள்ளது மிகவும் அபத்தமானது.

கார்ல் மார்க்ஸ் தனது படைப்புகளில், பிரிட்டிஷ் ஆட்சியின் அட்டூழியங்கள், சுரண்டல், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்தது போன்றவற்றை மிக கடுமையாக விமர்சித்துள்ளதை கவர்னர் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து, 1853-ம் ஆண்டு, நியுயார்க் டெய்லி டிரிபியூனுக்கு எழுதியக் கட்டுரையில், இந்தியாவின் விடுதலையை மார்க்ஸ் ஆதரித்திருக்கிறார்.

“ஆங்கிலேய முதலாளிகள் நிர்பந்தத்தால் எடுக்கும் நடவடிக்கைகள் இந்திய மக்களுக்கு விடுதலையை கொடுக்காது அல்லது இந்திய மக்களின் சமூக நிலையில் குறிப்பிடத்தக்க மாறுதலையும் ஏற்படுத்தப் போவதில்லை. இந்திய மக்களின் விடுதலையும் முன்னேற்றமும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியையும் அவைகளை பொதுமக்கள் தங்கள் உடமையாக பெறுவதையும் பொறுத்திருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது இந்தியாவின் விடுதலை என்பதே ஒரு பொதுவுடைமை அடிப்படையிலான விடுதலையாக இருக்க வேண்டுமென கார்ல் மார்க்ஸ் 1853-களிலேயே தெளிவாகக் கூறியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறிதளவும் பங்கெடுக்காத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் வாரிசான ஆர்.என்.ரவி, இந்திய விடுதலையை ஆதரித்த மார்க்ஸை விமர்சிப்பதற்கு தகுதியற்றவர். ஆர்.என்.ரவி ஏற்றுக் கொண்டுள்ள சனாதன தர்மக்கோட்பாடு, அவரை, கார்ல் மார்க்ஸ் இந்திய விடுதலைக்காக குரல் கொடுத்தவர் என்பதை ஏற்க மறுக்கச் செய்கிறது. உண்மைகளை மறைக்கச் செய்கிறது.

பிராமண மேலாதிக்கத்தையும், சாதிய ஏற்றத்தாழ்வையும், சாதி அடிப்படையிலான பரம்பரை குலத் தொழிலையும், ஆணாதிக்கத்தையும் தாங்கிப்பிடிக்கும், சனாதன தர்மத்தை உயர்த்திப்பிடிக்கும் கவர்னர் ரவிக்கு சமத்துவம் என்பதும், பொதுவுடைமை என்பதும் எட்டிக்காயாகவே கசக்கும். இந்திய உழைக்கும் மக்களின் சுதந்திரத்திற்கும், சமத்துவத்திற்கும், சகோதரத்துவத்திற்கும் எதிரான சனாதன தர்மக் கோட்பாடு, சமூகக் கட்டமைப்பு சமூகப் பொருளாதார மாற்றங்களால், கம்யூனிஸ்ட்டுகள், திராவிட இயக்கங்கள், அம்பேத்கரிஸ்ட்டுகள் உள்ளிட்ட முற்போக்கு சக்திகளின் செயல்பாட்டால் தகர்ந்து வருகிறது.

இதை சகித்துக் கொள்ள முடியாத சனாதன தர்ம காப்பாளாரக செயல்படும் ஆர்.என்.ரவி பதறுகிறார். இந்தியாவின் கலாசாரமே அழிக்கப்படுவதாக கூக்குரலிடுகிறார். எத்தனை ஆர்.என். ரவிகள் வந்தாலும், சனாதன தர்ம கலாச்சாரம் வீழ்வதையும், முற்போக்கு கலாசார மாற்றங்கள் நிகழ்வதையும் தடுத்துவிட முடியாது. கம்யூனிச எதிர்ப்பு நஞ்சை கக்கும் ஆர்.என்.ரவிகளின் மக்கள் ஒற்றுமையை கெடுக்கும் சதிகளை, தமிழக மக்கள் முறியடிப்பார்கள்.

இங்கிலாந்து நாட்டின் ஒளிபரப்பு நிறுவனம் 2000-மாவது ஆண்டில் நடத்திய ஆய்வில், “கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தலைசிறந்த பேரறிவாளர் கார்ல் மார்க்ஸ்” என அறிவித்ததை உலகம் கொண்டாடியது. அத்தகைய மாமேதை மார்க்சை ஆர்.என்.ரவிகள் சிறுமைப்படுத்த முயல்வது வெற்றி பெறாது. மார்க்சின் புகழ் என்றும் நீடித்து நிலைத்திருக்கும். மார்க்சியமே வெல்லும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்