'அரசியல் தலைவர்கள் ஒரு நேரத்தை குறிப்பிட்டு விட்டு பலமணி நேரம் கழித்து வருவது...' - எடப்பாடி பழனிசாமி

கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.;

Update:2025-09-28 10:37 IST

கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் இரவு 7 மணிக்குமேல் பிரசாரம் நடைபெற்றது. பிரசார கூட்டத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அதிமுக பொதுச்செயலாளரும், எதிக்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கரூர் அரசு மருத்துவமனைக்கு இன்று காலை நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். தவெக பிரசார கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மின் விளக்குகள் அணைக்கபட்டதாக தகவல் வெளியானது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

தவெக நடத்திய முந்தைய கூட்டங்களின் நிலையை ஆய்வு செய்து, அதற்கேற்ப முழு பாதுகாப்பை அரசு காவல்துறை தந்திருக்க வேண்டும். ஆனால், பாதுகாப்பு குறைபாடு இருந்தது தெரிகிறது

அனுபவமுள்ள கட்சிகளின் கூட்டங்களைப் பார்த்து புதிய கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும். காவல்துறை நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும். முழுமையான பாதுகாப்பு வழங்கியிருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம். அரசியல் தலைவர்கள் ஒரு நேரத்தை குறிப்பிட்டு விட்டு பலமணி நேரம் கழித்து வருவது ஏற்கத்தக்கது அல்ல.

அரசியல் கட்சி தலைவரும் நிலைமையை கூர்ந்து கவனித்து ஆலோசித்து, செயல்பட்டிருக்க வேண்டும். அரசியல் கட்சி கூட்டம் நடத்தினால், கட்சி, காவல்துறை, அரசை நம்பிதான் மக்கள் பங்கேற்கிறார்கள்.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மின்சாரம் துண்டிப்பால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாகவே கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என செய்தி வருகிறது. அரசும், காவல்துறையும் முழுமையான பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்