பூந்தமல்லி: சாலைத் தடுப்பில் மோதி பைக் விபத்து - ஓட்டிச் சென்ற 13 வயது சிறுவன் பலி

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.;

Update:2025-05-12 18:53 IST

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன். டிரைவராக உள்ளார். இவருக்கு பிரியன் (13 வயது) என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். கலைவாணன் இன்று வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த தந்தையின் பைக்கை எடுத்துக் கொண்டு அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான 2 சிறுவர்களுடன் பிரியன் சுற்றியுள்ளார். வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 3 பேரும் பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிறுவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் பிரியன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் காயமடைந்த மற்ற 2 சிறுவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்