கிருஷ்ணகிரி சுற்றுப்பயணத்தில் விஜயகாந்தின் பிறந்த தேதியை மாற்றி கூறிய பிரேமலதா
கூட்டத்தில் இருந்து ஒரு சிலர் அது டிசம்பர் மாதம் அல்ல ஆகஸ்டு மாதம் என தெரிவித்தனர்.;
கிருஷ்ணகிரி,
‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற தலைப்பில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட ராயக்கோட்டை, சூளகிரி, நெடுசாலை, வேப்பனப்பள்ளி ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்கள் மற்றும் மக்களை சந்தித்தார்.
அப்போது வேப்பனப்பள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நெடுசாலை கிராமத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி விஜயகாந்தின் பிறந்தநாள் என்று கூறுவதற்கு பதிலாக, டிசம்பர் மாதம் 25-ந் தேதி விஜயகாந்த் பிறந்தநாள். அன்று தே.மு.தி.க. சார்பில் பல்வேறு நலஉதவிகள் மக்களுக்கு வழங்கப்படும்’ என்றார்.
இதனால் அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்து ஒரு சிலர் அது டிசம்பர் மாதம் அல்ல ஆகஸ்டு மாதம் என தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய பிரேமலதா, ‘விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி கேப்டன் பிரபாகரன் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதை திரையரங்குக்கு சென்று காணுங்கள்’ என்றார்.