மலைக்கு கொண்டு செல்லப்பட்டது மகா தீப கொப்பரை

சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் அதனை போற்றும் வகையில் காா்த்திகை தீபத்தன்று மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.;

Update:2025-12-02 11:57 IST

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் இடையே ஏற்பட்ட ‘தான்’ என்ற அகந்தையை போக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளையே கார்த்திகை தீபத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பெயர் சூட்டி அழைக்கப்படும் 2,668 அடி உயரமுள்ள மலையையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் அதனை போற்றும் வகையில் காா்த்திகை தீபத்தன்று இந்த மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

இந்தநிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மலை உச்சிக்கு மகா தீப கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. சுமார் ஐந்தரை அடி உயரமும் 300 கிலோ எடையும் கொண்ட கொப்பரையை ஊழியர்கள் சுமந்து சென்றனர். சுமார் 2,600 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையில் நாளை (டிச.03) மாலை மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்