கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை ரத்துசெய்ய கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் பலியான இடத்தில் சி.பி.ஐ. டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;
சென்னை,
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை போலீசார், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டவர்கள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணையை ஆய்வு செய்வதற்காக நேற்று காலை 10 மணியளவில் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு சி.பி.ஐ. டி.ஐ.ஜி. அதுல்குமார் தாகூர் வருகை தந்தார். பின்னர் அவர் சி.பி.ஐ. விசாரணை செய்த ஆவணங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து மதியம் 3.20 மணியளவில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் நடந்த சம்பவம் குறித்து விளக்கி கூறினர். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தை சுற்றியுள்ள பல்வேறு இடங்களை சுமார் 30 நிமிடங்கள் ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில் இந்த விசாரணையை கண்காணிப்பதற்காக ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சுமித் சரண், சோனல் வி. மிஸ்ரா ஆகியோர் அடங்கிய சிறப்புக்குழு இரவு 7.30 மணி அளவில் கரூருக்கு வருகை தந்தனர்.
இதனிடையே கரூர் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள், இதர பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் ஆகியோர் மனுக்கள் ஏதும் அளிக்க விரும்பினால் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மேற்பார்வை குழுவினரிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி முதல் மனுக்கள் அளிக்கலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
சிறப்புக்குழு விசாரணை சரியான திசையில் பயணித்ததால் அதற்கும், அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணைக்கும் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் தவெக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, “அரசின் விரிவான வாதங்களை கேட்காமல் சிபிஐ-க்கு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அரசு அதிகாரிகள் பேட்டியளித்ததை காரணம் காட்டி சிபிஐ விசாரணக்கு உத்தரவிட முடியாது. சட்டம்-ஒழுங்கு மாநில பட்டியலில் இருப்பதால், கூட்டநெரிசல் குறித்து மக்களுக்கு விளக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு” என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.