தலையில் கல்லை போட்டு சித்தியை கொடூரமாக கொன்ற தனியார் கம்பெனி ஊழியர்.. காரணம் என்ன..?
சித்தியை கொன்று கை, கால்களை கட்டி உடலை கிணற்றில் வீசிய தனியார் கம்பெனி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.;
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள துறிஞ்சிப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேலு (வயது 60). விவசாயியான இவருக்கு வெறுத்தாம்பாள் (55), ஜெயக்கொடி (45) என்ற 2 மனைவிகள்.
இதில் மூத்த மனைவி வெறுத்தாம்பாள் மூலம் பாலகுரு (28), பிரகாஷ் ராஜ் (25) என்ற 2 மகன்களும், ஜெயக்கொடி மூலம் பூபாலன்(19) என்ற மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர். இவர்களில் பாலகுரு சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராகவும், பிரகாஷ்ராஜ் திண்டிவனம் சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். பூபாலன் மேல்மலையனூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டும், மகள் சென்னையில் உள்ள தனியார் கல்லூாியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டும் படித்து வருகிறார்கள்.
இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த வெறுத்தம்மாள் தனது மகன்களுடன் திண்டிவனம் தாலுகா நடுவாநந்தம் கிராமத்தில் வசித்து வருகிறார். ஜெயக்கொடி கணவருடன் துறிஞ்சிப்பூண்டியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பழனிவேலு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ஜெயக்கொடி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். நேற்று காலையில் ஜெயக்கொடி வீட்டின் முன்பும் எதிரே உள்ள கிணற்றின் அருகிலும் ரத்தக்கறை படிந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே இது குறித்து வளத்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடியபோது அங்கே கை, கால்கள் கட்டப்பட்டு தலை சிதைந்த நிலையில் கிடந்த ஜெயக்கொடியின் உடலை மீட்டனர். அவரை யாரோ அடித்துக்கொன்று கை, கால்களை கட்டி பின்னர் உடலோடு கல்லையும் சேர்த்து கட்டி பிணத்தை கிணற்றில் வீசி சென்று இருப்பது தொியவந்தது. இந்த கொலை சம்பந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஜெயக்கொடிக்கும், பிரகாஷ் ராஜிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் திண்டிவனம் விரைந்து சென்று வீ்ட்டில் இருந்த பிரகாஷ்ராஜை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் பழனிவேல் பெயரில் இருந்த நிலத்தை பிரகாஷ்ராஜ் பங்கு பிரித்து கேட்டதாகவும், அதற்கு ஜெயக்கொடி மறுத்து வந்ததாகவும் இதனால் ஏற்பட்ட தகராறில் பிரகாஷ்ராஜ் ஜெயக்கொடியின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு அவரை கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும் ஜெயக்கொடியின் கை, கால்களை கட்டி கொலை செய்ய பயன்படுத்திய கல்லை உடலோடு சேர்த்துக்கட்டி எதிரே உள்ள கிணற்றில் வீசி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து பிரகாஷ்ராஜை போலீசார் கைது செய்து இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.