ராணிப்பேட்டை: தண்ணீர் வாளியில் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழப்பு
விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் வாளியில் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த வானாபாடி அருகே உள்ள எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவருக்கு பிரகதீஷ் மற்றும் தினேஷ் ஆகிய இரு மகன்கள். இவர்களில் தினேசுக்கு ஒரு வயதுதான் ஆகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே தினேஷ் விளையாடிக்கொண்டிருந்தான். அங்கு வைக்கப்பட்டிருந்த வாளியில் உள்ள தண்ணீரை தொட்டு விளையாடியபோது திடீரென வாளிக்குள் தலைக்குப்புற விழுந்து விட்டான். இதில் அவன் வாளிக்குள் இருந்த தண்ணீரில் மூழ்கினான்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் தினேஷை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது தினேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.