புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.;

Update:2025-10-24 12:34 IST

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் கடந்த 2008-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம், 58 ஏக்கர் பரப்பினை கொண்ட அடையாறு உப்பங்கழியினை சீரமைத்து, 'தொல்காப்பியப் பூங்கா' உருவாக்கப்பட்டது. இந்த பூங்காவை 22.01.2011 அன்று அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையான பராமரிப்பின்றி தொல்காப்பியப் பூங்கா பொலிவிழந்தது. இதையடுத்து பல்வேறு புதிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் மறுமேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படி ஜூலை 2021-ம் ஆண்டு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையினால் 'தொல்காப்பியப் பூங்கா மறு மேம்பாட்டு' பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் தொல்காப்பியப் பூங்காவின் மறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு 42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கியது. அதன்பின்னர் தொல்காப்பியப் பூங்காவின் மறு மேம்பாட்டு பணிகளை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மேற்கொள்ள ஆரம்பித்தது.

அதன்படி நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மையம், பார்வையாளர் மாடம், நடைபாதை, சிற்றுண்டியகம், புதிய கழிப்பறை, திறந்தவெளி அரங்கம், இணைப்புபாலம், கண்காணிப்பு கேமராக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், ரூ.42.45 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது, பள்ளி சிறுவர்களுடன் இணைந்து பூங்காவினை முதல்-அமைச்சர் சுற்றி பார்த்தார். புதிய நுழைவுவாயில், பார்வையாளர் மாடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி உள்ளிட்ட வசதிகள் பூங்காவில் உள்ளன. இந்த பூங்கா சென்னை ராஜா அண்ணாமலைபுரம், எம்ஆர்சி நகர், மந்தைவெளி, அடையாறு, பட்டினம்பாக்கம், மயிலாப்பூர் பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்