தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் - தவெக தலைவர் விஜய் இரங்கல்

நகைச்சுவை கலைஞர் ரோபோ சங்கர் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-19 10:56 IST

டி.வி.யில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரோபோ சங்கர், பின்னாளில் ‘தீபாவளி' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார். ‘மாரி', ‘விஸ்வாசம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த அவர், பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கத் தொடங்கினார்.

சில மாதங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைகள் மூலம் மீண்டு வந்த அவர் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கினார். முன்பு போல உடல் நலமும் தேறினார். ஓரிரு நாட்களுக்கு முன்பாக சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் அவரது உடல்நிலை நேற்று மோசம் அடைந்தது. ‘வெண்டிலேட்டர்’ கருவியுடன் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ரோபோ சங்கர் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு திரை உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ரோபோ சங்கர் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நண்பர் ரோபோ சங்கர் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர்.

நண்பர் ரோபோ சங்கரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்