சேலம்: ஆட்டோ டிரைவரிடம் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் எடுத்த ஆசிரியர் கைது

உடற்கல்வி ஆசிரியரை திருவண்ணாமலைக்கு சென்று போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-10-27 01:54 IST

சேலம்,

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள காரிப்பட்டி நேருநகரை சேர்ந்தவர் மணி (வயது 53). ஆட்டோ டிரைவர். இவர், கடந்த மாதம் சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் ரூ.2 ஆயிரம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவர், ஏதோ கீழே விழுந்துவிட்டது என்று கூறினார். இதையடுத்து மணி கீழே குனிந்து தேடியபோது, ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த அவரது கார்டை எடுத்துவிட்டு வேறு கார்டை அந்த நபர் வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் மணியின் ஏ.டி.எம். கார்டை அந்த நபர் பயன்படுத்தி வேறு வங்கி ஏ.டி.எம். மூலம் ரூ.28 ஆயிரத்து 600-ஐ எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணி இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். மையம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அந்த நபரின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து விசாரித்தனர்.

அப்போது, அவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய குயிலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சரண்ராஜ் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திருவண்ணாமலைக்கு சென்று நேற்று அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை சேலத்திற்கு அழைத்து வந்து மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்