சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டம்
நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.;
அரசு பள்ளிகளில் பணியாற்றக்கூடிய இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் அரையாண்டு தேர்வு விடுமுறையை கணக்கில் கொண்டு, அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி, கடந்த 26-ந் தேதியில் இருந்து சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சென்னை எழும்பூர் அருகே உள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 1,500 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 6-வது நாளாக இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த தேர்லில் திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கமிட்டு ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சென்னை எழும்பூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 1,583 ஆசிரியர்கள் மீது எழும்பூர் காவல்துறையினர் அனுமதியின்றி கூடுதல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.