மின்வாரிய தற்காலிக ஊழியர்கள் சபிக்கப்பட்டவர்களா? - அன்புமணி
பணியின் போது உயிரிழந்த ஊழியர் சபீர் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அன்புமணி வழியுறுத்தியுள்ளார்.;
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
கிருஷ்ணகிரியில் மின்பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தற்காலிக பணியாளர் முகமது சபீர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முகமது சபீர் கடந்த 6 ஆண்டுகளாக மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணி செய்து வருகிறார். அந்த ஒரே காரணத்திற்காக அவருக்கு அரசுத் தரப்பிலிருந்து எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. இது நியாயமற்றது. தற்காலிகப் பணியாளர்களுக்கும் குடும்பங்கள் உண்டு; அவர்கள் தான் பலருக்கு வாழ்வாதாரம் ஈட்டித் தருகின்றனர். ஆனால், தற்காலிக ஊழியர்களின் உயிர்களுக்கு மதிப்பில்லை என்பது போல அரசு நடந்து கொள்வது முறையல்ல. தற்காலிக பணியாளர்கள் சபிக்கப்பட்டவர்கள் அல்ல.
தற்காலிகப் பணியாளர்கள் குறித்த மனிதநேயமற்ற அணுகுமுறையை தமிழக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும். மின்வாரியத் தற்காலிகப் பணியாளர்கள் உயிரிழக்கும் போது அவர்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட உரிமைகளை வழங்குவது குறித்த கொள்கைகளை தமிழக அரசு உடனடியாக வகுக்க வேண்டும். முகமது சபீரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.