சசிகலா, ஓ.பி.எஸ்.சை சந்திக்க செங்கோட்டையன் திட்டம்?
செங்கோட்டையனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்து கட்சி நிர்வாகிகள் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.;
கோபி,
அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையனுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பெரும் விரிசலாக மாறியுள்ளது. நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். 10 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார்.
இந்த நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் நாங்களே ஒருங்கிணைக்கும் நடவடிக்கை மேற்கொள்வோம் என்று கூறி அதிரவைத்தார். இந்த அறிவிப்பு அ.தி.மு.க.வில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, ஆதரவும் எதிர்ப்பும் ஒன்றாக கிளம்பின. இந்நிலையில் நேற்று செங்கோட்டையனின் அமைப்புச் செயலாளர் பதவியும், அவர் வசித்து வந்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியும் பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சிலரின் பதவியும் பறிக்கப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரோடு புறநகர் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பினர். அதேபோல் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் புளியம்பட்டி, சத்தியமங்கலம், அந்தியூர் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கிடையில் கட்சிப் பதவி பறிப்பு குறித்து செங்கோட்டையன் கூறும்போது: “இந்த நடவடிக்கையை நான் எதிர்பார்க்கவில்லை. என்னிடம் கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஒருங்கிணைப்பு பணி தொடரும்” என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழு புகழேந்தி நேற்று மாலை செங்கோட்டையனை அவரது தோட்டத்து இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் புகழேந்தி கூறும்போது, எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். “அவர் 4வது இடத்துக்கு தள்ளப்படுவார். ஒருங்கிணைப்பு குறித்து ஓ. பன்னீர்செல்வம், தினகரன், சசிகலாவை சந்திக்க செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். முன்னாள் அமைச்சர்கள் சிலர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்” என்றும் கூறினார்.
இந்நிலையில் செங்கோட்டையனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்து கட்சி நிர்வாகிகள் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. புகழேந்தி அழைப்பை ஏற்று அவர் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து ஒருங்கிணைப்பு குறித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நாளை மறுநாள் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில் தொடர்ந்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சந்தித்து வருகின்றனர். ஏற்கனவே திருப்பூர், நீலகிரி மாவட்ட ஆதரவாளர்கள் சந்தித்துள்ளனர். அதைத்தொடர்ந்து இன்று காலை கோவை மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் செங்கோட்டையனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதேபோல் கோபியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்து வருகின்றனர். இதனால் அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.செங்கோட்டையனின் அடுத்த கட்ட நடவடிக்கை எந்த மாதிரி இருக்கும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.