வீட்டில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் வீடு திரும்பிய செங்கோட்டையன்
அதிமுக கொடி கட்டாத காரில் செங்கோட்டையன் வெளியே சென்றார்.;
சென்னை,
அ.தி.மு.க. ஒன்றிணைவது சம்பந்தமாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 2 பேரும் அவ்வப்போது அதுசம்பந்தமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
அ.தி.மு.க. ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதிப்பதாக கூறி செங்கோட்டையன் தெரிவித்தார். இதனால் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனிடையே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடி.வி.தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். அப்போது அவர், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
எனவே செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்தநிலையில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் வருகிற 27-ந் தேதி (நாளை) நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க.வில் இணைய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் செங்கோட்டையன் நேற்று ஈரோட்டில் இருந்து சென்னைக்கு சென்றார். முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ஏற்றதாழ்வுகளை சந்தித்து அ.தி.மு.க.வுக்காக உழைத்தேன். அதற்கு கொடுக்கப்பட்டிருக்கிற பரிசுதான் அ.தி.மு.க.வில் இருந்து என்னை நீக்கியது. இதனால் மனவேதனையில் உள்ளேன் என்று கூறினார்.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட செங்கோட்டையன் கால் மணி நேரத்தில் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். தவெக தலைவர் விஜய்யை செங்கோட்டையன் இன்று சந்திக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், வீடு திரும்பியது பரபரப்பாக பேசப்படுகிறது. அதிமுக கொடி கட்டாத காரில் செங்கோட்டையன் வெளியே சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து செங்கோட்டையன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக சட்டப்பேரவை செயலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.