மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாநில கல்விக்கொள்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
3, 5, 8-ம் வகுப்புகளுக்கான தேர்வு நடைமுறைப்படுத்தப்படாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
மாநில கல்விக் கொள்கை வெளியிடும் நிகழ்ச்சி முடிந்த பிறகு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
“தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப இந்த கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வரும் ஆண்டுகளில் சூழல் மாறும்போது அதற்கேற்றாற்போல், கல்விக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வருவோம். 9-ம் வகுப்பு படிக்கும் போதே உயர்கல்வியை எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? என்பதை வழிகாட்டக் கூடிய நடைமுறைகளை கொண்டு வர உள்ளோம்.
மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மாநில கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இருமொழிக் கொள்கை என்பதை உறுதிப்படுத்திவிட்டோம். தேசியக் கல்விக் கொள்கையில் குறிப்பிட்ட 3, 5, 8-ம் வகுப்புகளுக்கான தேர்வு நடைமுறைப்படுத்தப்படாது.
மாநில கல்விக் கொள்கையை பொறுத்தவரையில், ஏற்கனவே தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையில் என்ன மாதிரியான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறதோ அதை எந்த தடையும் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்படுவதையும், யாருடைய வலியுறுத்தல் இல்லாமல் அதை செய்வதையும் உறுதிப்படுத்துகிறது.
இது இல்லாமல், புதிய திட்டங்கள் செயல்படுத்துவதையும் இப்போதில் இருந்து தொடங்கிவிடுவோம். சமக்ர சிக்சா நிதி (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதி) தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது. நல்ல தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும் என்று நம்புகிறோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.