கூட்டத்தில் கற்கள் வீசப்பட்டன: சதி நடந்துள்ளது...தவெக புகார்
கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.;
கரூர்,
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்து உள்ளனர்.மேலும் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த விவகாரத்தில்,சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தண்டபாணியின் இல்லத்திற்குச் சென்று த.வெ.க. சார்பில் முறையீடு செய்தனர் .
இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை செய்ய உத்தரவிட கோரிக்கை வைத்தனர் . மேலும் கூட்டத்தில் கற்கள் வீசப்பட்டன எனவும் திட்டமிட்டு சதி நடந்துள்ளது எனவும் தவெக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது .
நாளை பிற்பகல் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.