கடந்த ஆண்டின் பயண அட்டையை காண்பித்து அரசு பஸ்களில் மாணவர்கள் பயணிக்கலாம் - அமைச்சர் சிவசங்கர்
பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட அலுவலர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"வருகிற 2-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டும் 2025-26-ம் கல்வியாண்டில் மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை அவரவர் கல்வி பயிலும் பள்ளி, கல்லூரியிலேயே இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் 2024-25-ம் கல்வி ஆண்டுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டணமில்லா பயண அட்டை, பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகளால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கண்டக்டரிடம் காண்பித்து மாணவ, மாணவிகள் கட்டணமின்றி பயணிக்கலாம்.
பள்ளி தொடங்கும், முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட அலுவலர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்ல டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.