மாணவர்களின் தனித்திறனைக் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்

பள்ளிகளிலும் சுத்தமான குடிநீர், போதிய கழிவறை வசதிகள் உள்ளனவா என்பதையும் திமுக அரசு ஆய்வு மேற்கொண்டு உறுதிபடுத்த வேண்டும்.;

Update:2025-05-31 22:00 IST

சென்னை,

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;

பள்ளிகளில் ஐந்து நாட்களுக்கு புத்தகப்பை வேண்டாம், மாணவர்களின் தனித்திறன்களை கண்டறியுங்கள்!

தமிழகத்தில் ஆண்டு விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2 ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுவதை மனதார வரவேற்கிறேன். அலாரம். சீருடை புத்தகப்பை. லஞ்ச் பாக்ஸ் உணவு, வீட்டுப்பாடம், டியூஷன். பி. டி வாத்தியாரின் விசில் சத்தம் போன்ற எந்த விதிமுறைகளும் இன்றி விடுமுறை நாட்களில் கட்டுப்பாடின்றி சுற்றித் திரிந்த மழலைச் செல்வங்கள் மீண்டும் பொறுப்புடன் பள்ளி செல்வதைக் காண அனைத்து பெற்றோர்களைப் போலவே நானும் மிக ஆவலாகத் தான் இருக்கிறேன்.

ஆனால் பள்ளிகள் திறந்தவுடன் வெறும் பாடப் புத்தகங்களில் மட்டுமே பிள்ளைகளை மூழ்கடிக்காமல் ஐந்து நாட்களுக்கு மாணவர்களின் புத்தகப்பைகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு ஒவ்வொரு மாணவனின் தனித்திறனைக் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பாக தமிழகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் வேளையில், தற்போது பள்ளிப்படிப்பை விட பிள்ளைகளுக்கு பாலியல் ரீதியான புரிதலை ஏற்படுத்துவது தான் சாலச் சிறந்தது. தகுந்த ஆசிரியர்கள் மூலம் மோசமான தொடுகை (Good touch, Bad touch) குறித்து பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும், தவறாக தன்னை நெருங்குபவர்கள் யாராயினும் மாணவர்கள் தைரியமாகப் புகாரளிக்கத் தேவையான வழிமுறைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

மேலும் விடுமுறைக் கொண்டாட்டம் முடிந்து பள்ளி திரும்பும் பிள்ளைகளுக்கு. கடிவாளமிட்ட குதிரை போல வெறும் பாடங்களை மட்டுமே கற்பித்தால் அவர்களின் மனநிலை எப்படியிருக்கும்? பல நாட்கள் கழித்து தனது சக நண்பர்களை சந்திக்கையில் பாடச் சந்தேகங்களை மட்டுமா கேட்டுக் கொண்டிருக்க முடியும்? புதிய மாணவர்களுடன் அறிமுகம் செய்துகொள்ளவும். பழைய தோழர்களுடன் அளவளாவுவதற்கும் சிறிது கால அவகாசம் தேவையல்லவா?

எனவே விடுமுறை முடிந்து வரும் ஆசிரியர்களும் மாணவர்களும் நல்ல புரிதலுடன் தங்கள் கற்றல் பயணத்தையும் கற்பித்தல் சேவையையும் தொடரவும், மாணவர்களின் தனித்திறனைக் கண்டறிந்து ஊக்குவிக்கவும். இந்த புத்தகமில்லா ஐந்து நாட்கள் பேருதவியாக இருக்கும்.

மேலும், அரசுப் பள்ளி மாணவர்கள் ஊற்று தோண்டி நீர் பருகிய கொடுமையையும், பள்ளிகளில் போதிய கழிவறையின்றி இரு மழலை உயிர்கள் காவு வாங்கப்பட்ட கொடூரத்தையும் இந்த தமிழகம் இன்னும் மறக்கவில்லை. இனி ஒரு பிஞ்சு உயிரை இழக்க நாங்கள் தயாராக இல்லை. எனவே தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் சுத்தமான குடிநீர், போதிய கழிவறை வசதிகள் உள்ளனவா என்பதையும் திமுக அரசு ஆய்வு மேற்கொண்டு உறுதிபடுத்த வேண்டும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்