பயிற்சி முகாமுக்கு அழைத்துச்சென்று ஆபாச பேச்சு, பாலியல் தொல்லை; அரசு பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் புகார்

ஆசிரியர் தியாகராஜன் தங்களுக்கும் இதேபோன்று பாலியல் தொல்லை கொடுத்ததாக பிற மாணவிகளும் தெரிவித்தனர்.;

Update:2025-11-19 12:38 IST

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் என்ற ஹென்றி. இவர் விளாத்திகுளம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் சிலரை ஒரு கிராமத்திற்கு பாடம் தொடர்பாக செயல்முறை பயிற்சி முகாமுக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவ-மாணவிகளை 6 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

அப்போது ஆசிரியர் தியாகராஜன், ஒரு மாணவியிடம் தவறாக நடக்க முயன்று ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது தோழிகளிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். அப்போது பிற மாணவிகளும், தங்களுக்கும் இதேபோன்று, ஆசிரியர் தியாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர்.

இதனையடுத்து மாணவிகள், தங்களது வகுப்பு ஆசிரியையிடம் நடந்த சம்பவம் பற்றி கூறினர். வகுப்பு ஆசிரியை, மாணவிகளுடன் சென்று தலைமை ஆசிரியர் அன்னை சீபா பிளவர் லைட் என்பவரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார், ஆசிரியர் தியாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாணவிகளின் புகாரை அலட்சியப்படுத்தியதாக தலைமை ஆசிரியை அன்னை சீபா பிளவர் லைட் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே தலைமறைவான ஆசிரியர் தியாகராஜனை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் ஆசிரியர் தியாகராஜன், தலைமை ஆசிரியை அன்னை சீபா பிளவர் லைட் ஆகியோரை பணியிைட நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்