தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாண விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.;

Update:2025-11-16 19:21 IST

பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்பாள் பித்தளை சப்பரம், கிளிவாகனம், அன்னபட்சி வாகனம், சிம்மவாகனம், வெள்ளி மயில் வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், கமல வாகனம், காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் 9ம் நாளன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.

திருவிழாவின் 10ம் நாளன்று காலை 10 மணிக்கு மஞ்சள் இடித்தல், சுந்தரபாண்டிய விநாயகர் ஆலயத்தில் பாகம் பிரியாள் அம்பாளுக்கு குடமுழுக்கு தீர்த்தவாரி, தீபாராதனை, இரவு 7 மணிக்கு பாகம் பிரியாள் அம்பாள் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூம்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

திருவிழாவின் 11ம் நாளான நேற்று காலையில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு சங்கர ராமேசுவரர் ரிஷப வாகனத்தில் பாகம்பிரியாள் அம்பாளுக்கு காட்சி தருதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் இரவு சுவாமி மற்றும் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி-அம்பாள் பட்டினபிரவேசம் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்