சென்னையில் 14-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்: குண்டுக்கட்டாக கைது

14-வது நாளாக பதிவு மூப்பு இடை நிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.;

Update:2026-01-08 13:01 IST

சென்னை,

‘சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதியில் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த 5-ந்தேதி முதல் பள்ளிகள் திறந்தநிலையிலும், இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை விட்டபாடில்லை.

பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு எட்டப்படவில்லை. நேற்றும் தங்கள் போராட்டத்தை ஆசிரியர்கள் முன்னெடுத்தனர். ஆசிரியர்களின் இந்த போராட்டம் தொடர்பாக தொடக்கக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்தது. அதாவது, பணிக்கு வராமல் போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அரசு எச்சரித்து இருந்தது.

கல்வித்துறையின் உத்தரவு நேற்று வெளியான சில நிமிடங்களில், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழுவினர் வெளியிட்ட தகவலில், ‘5 ஆயிரம் ஆசிரியர்கள் வரை சென்னையில் நாளை (அதாவது இன்று) கூடுகிறார்கள் என்பது அரசின் கவனத்துக்கு சென்றதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையெல்லாம் எதிர்பார்த்துதான் நாம் களத்தில் நிற்கிறோம்.

இதனை உடைக்க போராட்டத்தில் கட்டுக்கடங்காமல் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும். அசையாத அரசாங்கத்தை அசைத்து பார்த்திருக்கிறோம். வெற்றி பெறும் வரை போராட்டம் உறுதியோடு செல்லும் என்று கூறியிருந்தனர். ஏற்கனவே அறிவித்தபடி, இன்று சென்னை எழும்பூரில் இடை நிலை ஆசிரியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 14-வது நாளாக அவர்களின் போராட்டம் இன்றும் நீடித்த நிலையில், போலீசார் ஆசிரியர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்