'ஜனநாயகன்' தணிக்கை விவகாரம்: விஜய்க்கு ஆதரவாக 'கை' கொடுக்கும் காங்கிரஸ்: கூட்டணிக்கு அச்சாரமா?
நடிகர் விஜய்யுடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொலைப்பேசி மூலமாகவும், முக்கிய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரடியாகவும் பேசினார்கள்;
சென்னை,
தமிழகத்தில் திமுக தலைமையிலான பலம் வாய்ந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்து வருகிறது. ஆனால், எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை, 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்' என்று திமுக தலைமையை வலியுறுத்தி வருகிறது."மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி" என்ற கொள்கையுடன் செயல்பட்டு வரும் திமுகவோ, 'ஆட்சி அதிகாரத்தில் பங்குதர முடியாது' என்று ஏற்கனவே கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இருந்தாலும் விடாப்பிடியாக காங்கிரஸ் அதே கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாகச் சொல்லும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாமா? என்று காங்கிரஸ் கட்சி யோசித்து வருகிறது. திமுகவும், காங்கிரஸ் போனால் பரவாயில்லை, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவரலாம் என்ற எண்ணத்தில் பேச்சு வார்த்தையை முடுக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில், நடிகர் விஜய்யுடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொலைப்பேசி மூலமாகவும், முக்கிய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரடியாகவும் பேசினார்கள். இது கூட்டணிக்கான அச்சாரமாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், பட நிறுவனம் கோர்ட்டின் கதவை தட்டியுள்ளது. தீர்ப்பு நாளை காலை வழங்கப்பட உள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பில் இருந்து நடிகர் விஜய்க்கு ஆதரவு பெருகிவருகிறது. காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஜய் வசந்த் ஆகியோர் 'ஜனநாயகன்' பட தணிக்கை விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
இதை வைத்து பார்க்கும்போது, சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணையுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இந்த மாத இறுதியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழகம் வர இருக்கின்றனர். அந்த நேரத்தில், தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.