ஆட்சி அதிகாரத்தில் பங்கு: இம்மாத இறுதிக்குள் தமிழகம் வரும் ராகுல் காந்தி, பிரியங்கா

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழகம் வருகை தர இருப்பதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.;

Update:2026-01-08 11:09 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழகத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி, நடிகர் விஜய்யின் தவெக உடன் கூட்டணி பற்றி பேச இருப்பதாக, அவ்வப்போது தகவல்கள் பரவி வந்தன. இதேபோல பீகார் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக காங்கிரஸ் கட்சி, தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகுகிறது என்றும் பேசப்பட்டது. இந்த விவகாரம் தமிழக அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பானது.

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோரை உள்ளடக்கிய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுனர் பிரிவு மற்றும் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து தீவிரமாக பேசி வருகின்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பதவியேற்ற பின்னர் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக கிராம கமிட்டிகளை அமைப்பதில் முனைப்பு காட்டி வந்தார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் 18 ஆயிரத்து 500 கிராம கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் கூறுகின்றனர். இந்த 18 ஆயிரத்து 500 கிராம கமிட்டியில் ஒரு கமிட்டிக்கு தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 10 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சுமார் 2 லட்சம் கிராம கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்கும் கிராம கமிட்டி மாநாடு ஜனவரி மாத இறுதிக்குள் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதே போன்று தமிழ்நாடு காங்கிரஸ் மகளிர் மாநாடும் நடத்த திட்டமிட்டு உள்ளனர். மேலும், கன்னியாகுமரியில் மீனவர் மாநாடு நடத்துவதற்கான திட்டமும் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கிராம கமிட்டி மற்றும் மகளிர் மாநாடு சென்னை மற்றும் திருச்சியில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், இந்த கிராம கமிட்டி மாநாட்டில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியும், மகளிர் மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்