கோவில் சொத்து விவரங்கள்; 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
கோர்ட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் ஏன் சொத்து விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.;
சென்னை,
தமிழகத்தில் உள்ள கோவில்கள் தொடர்பான டெண்டர்கள், ஒப்பந்தங்கள், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், சொத்துகள் தொடர்பான பதிவேடுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் நடராஜன், கோவில் சொத்துகள் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால், அதில் சைபர் குற்றம் மூலம் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், ஏற்கனவே வருவாய்த்துறையின் தமிழ்நிலம் என்ற இணையதளத்தில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த விவரங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
அப்போது நீதிபதி லட்சுமி நாராயணன், கோவில்களின் சொத்து விவரங்கள், தணிக்கை கணக்கு விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதில் என்ன தயக்கம்? என அறநிலையத்துறைக்கு கேள்வி எழுப்பினார். மேலும் அறநிலையத்துறையிடம் போதுமான நிதி இல்லையா? கோவில் சொத்துகளை ஆன்லைனில் வெளியிட கோர்ட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் இதுவரை ஏன் பதிவேற்றம் செய்யப்படவில்லை? என்றும் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து, கோவில் சொத்து விவரங்கள், தணிக்கை விவரங்கள், கோவில் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள், பதிவேற்றம் செய்யப்படாத விவரங்கள் உள்ளிட்டவற்றை 2 வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.