நீதித்துறையை இத்தனை ஆணவத்தோடு அணுகும் ஒரு அரசை நாடு இதுவரைக் கண்டதில்லை - எச்.ராஜா

“மத நல்லிணக்கம்” என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் திமுகவின் உண்மை முகம் இதுதான் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-09 17:11 IST

சென்னை,

திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்றலாம் என்பதை நியாயமான முறையில் ஆதாரத்துடன் விளக்கிக் கூறிவிட்டார் என்பதற்காக, நாட்டின் மரியாதைக்குரிய பதவியில் இருக்கும் நீதிபதியை சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பிய்த்துப் பிராண்டினர், அவரது குடும்பப் பின்னணியைத் தோண்டித் துருவி திட்டித் தீர்த்தனர், அவரைப் பதவிநீக்கம் செய்யக்கோரி பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர முயன்றனர், தனது கைக்கூலிகளை ஏவி அவரைக் கொச்சைப்படுத்தும் ஒரு புத்தகத்தை வெளியிட துணை நின்றனர், இதுதான் “மத நல்லிணக்கம்” என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் திமுகவின் உண்மை முகம்.

பொறுப்பில் உள்ள ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியை மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கும் ஒரு புத்தகத்தை சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்போவதாகக் கீழைக்காற்று என்ற பதிப்பகம் பகிரங்கமாக விளம்பரப்படுத்துகிறது என்றால் அது ஆளும் அரசின் துணையின்றி நடக்குமா? கரூர் வழக்கின் உயர்நீதிமன்றத் தீர்ப்பினை விமர்சனம் செய்தவர்களை “நீதிமன்ற அவமதிப்பு” எனக்கூறி இரவோடு இரவாகக் கைது செய்த காவல்துறையினர், இப்படி ஒரு நீதிபதியையே மதரீதியாகக் கொச்சைப்படுத்துபவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது எதனால்?

தங்களுக்குப் பிடிக்காத தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக ஜனநாயகத்தின் மூன்றாம் தூணான நீதித்துறையின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கத் துணிந்து விட்ட அறிவாலய அரசு, சமூகத்திலிருந்தே பிடுங்கி எறியப்பட வேண்டிய நஞ்சுக்கொடி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்