உல்லாசத்திற்கு இடையூறு.... கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி - பரபரப்பு வாக்குமூலம்

பெங்களூரு பகுதியை சேர்ந்த நந்தினி என்பவருடன் பாரத்துக்கு திருமணம் நடைபெற்றது.;

Update:2025-07-23 10:54 IST

வேலூர்,

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் அருகே குப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரின் மகன் பாரத் (வயது 36). கேட்டரிங் படித்து விட்டு சென்னையில் தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு பகுதியை சேர்ந்த நந்தினி என்பவருடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 மற்றும் 3 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் பாரத் விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். மாலை சுமார் 6 மணியளவில் மனைவி மற்றும் இளைய மகளுடன் குருவராஜ பாளையம் பகுதியில் கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியபோது பாரத் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

இதற்கிடையே கொலை நடந்தபோது சம்பவ இடத்தில் உடனிருந்த பாரத்தின் 3 வயது இளைய மகளிடம் போலீசார் ரகசியமாக விசாரித்தனர். அதில் சஞ்சய் மாமாதான் அப்பாவை வெட்டினார் என அழுதுகொண்டே சிறுமி கூறினாள். அதைத்தொடர்ந்து பாரத்தின் மனைவி நந்தினியிடம் போலீசார் தனியாக விசாரணை நடத்தினர். அப்போது எனக்கு எதுவும் தெரியாது. வாகனம் தவறி கீழே விழுந்தது மட்டும்தான் எனக்கு தெரியும் என முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக நந்தினிக்கு, எதிர்வீட்டில் வசிக்கும் திருமூர்த்தி என்கிற சஞ்சய் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது கணவர் பாரத்துக்கு தெரியவரவே அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தகராறு நடக்கும் போதெல்லாம் அதுகுறித்து கள்ளக்காதலன் சஞ்சய்க்கு அவர் தகவல் கொடுத்து வந்துள்ளார். இதனையும் கண்டுபிடித்த பாரத் மனைவியை மீண்டும் எச்சரித்துள்ளார். இது சம்பந்தமாக கணவன்- மனைவிக்கிடையே சமீபத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அழுது கொண்டே தனது கள்ளக்காதலனுக்கு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் சஞ்சய், பாரத்தை முடித்து விடலாம் என கூறியுள்ளார்.

அதன்படி 2 பேரும் சேர்ந்து பாரத்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். நீண்ட நாட்களாக திட்டமிட்டு ஊருக்கு வந்த கணவர் பாரத்தை, நந்தினி மாலை நேரத்தில் கடைக்கு செல்லவேண்டுமென கூறி அவரை அழைத்து சென்றுள்ளார். அப்போது பாரத்தை, சஞ்சய் வெட்டிக்கொலை செய்துள்ளார்.

பின்னர் தலைமறைவாக இருந்த சஞ்சய்யை அவரது செல்போன் எண்ணை வைத்து 3 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்து வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்தனர். இதில் இருவரும் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசாரிடம் சஞ்சய் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

ஊர் அருகே செல்லும்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சாலையின் நடுவே தென்னை மட்டைகளை போட்டு காத்திருந்தேன். அப்போது அந்தவழியாக வந்த பாரத் வாகனத்தை மெதுவாக ஓட்டினார். உடனே மறைந்து இருந்த நான் தேங்காய் வெட்டும் கத்தியுடன் வந்து அவரிடம் தகராறு செய்தேன். இதனால் இருவருக்கும் இடையே தகராறு முற்றி அவரது மனைவி கண் முன்னே பாரத்தை சரமாரியாக வெட்டினேன்.

இதில் கை, தலை, முகம் உள்ளிட்டவற்றில் வெட்டுகாயம் ஏற்பட்டு முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பாரத் ரத்த வெள்ளத்தில் மனைவி, மகள் கண் முன்னே உயிரிழந்தார் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்