தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 16-ந் தேதி தொடங்கியது. தொடங்கிய நாளிலேயே கனமழை பெய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பொதுவாக வடகிழக்கு பருவமழை என்பது காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னம் போன்றவற்றால் பெய்து வருகிறது.
தமிழகத்தில் வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதற்கிடையே ‘டிட்வா’ புயல் உருவாகி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் மழைப்பொழிவை ஏற்படுத்தியது.
சில மாவட்டங்களில் கனமழை, வேறு சில மாவட்டங்களில் அதிகனமழை என கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. இந்த மழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நிர்நிலைகள் நிரம்பின. மேலும் டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 6 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை காலத்தில் இயல்பான நிலையில் 396.9 மிமீ மழை பொழியும் நிலையில், இன்று வரை 419.3 மிமீ மழை பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 2 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 731.9 மிமீ மழை பொழியும் நிலையில், இன்று வரை 715.1 மிமீ மழை மட்டுமே பொழிந்துள்ளது. மற்ற இடங்களில் ஓரளவு மழைப்பொழிவு இருந்துள்ளது.