'அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு ஒரே எதிரி தி.மு.க.' - நயினார் நாகேந்திரன் பேச்சு
தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒன்று கூடி பேசி முடிவெடுப்போம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;
விருதுநகர்,
நெல்லையில் வருகிற 17-ந்தேதி பா.ஜனதா சார்பில் நடைபெற உள்ள பூத் கமிட்டி மாநாடு தொடர்பாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆத்திபட்டியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
"அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணிக்கு ஒரே எதிரி தி.மு.க.தான். வரும் காலங்களில் பா.ஜனதா தொண்டர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் உரிய மரியாதை கிடைக்க வேண்டும். அதற்கு நான் என்றென்றும் உறுதுணையாக இருப்பேன். எங்களின் மனதில் இடம் பெறும் வகையில் உங்களது பணி இருக்க வேண்டும்.
மண்டல பொறுப்பாளர் ஒவ்வொருவருக்கும் அந்தந்த பாகம் எண், வாக்காளர்கள் விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இருந்து 5 ஆயிரம் பேரை மாநாட்டிற்கு திரட்டி வரவேண்டும்."
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படும் தொகுதிகள் குறித்து கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒன்று கூடி பேசி முடிவெடுப்போம். ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியில் இருந்து விலகி சென்றுவிட்டார். அது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை, என்றார்.