பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது...!

சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்ய உள்ளது.;

Update:2025-10-13 07:12 IST

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டம் 4 நாட்கள் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மார்ச் 14-ம் தேதி சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. அதைத்தொடர்ந்து, மார்ச் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது.

மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதிவரை துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்தன. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் 6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற அவை விதியின் அடிப்படையில், தமிழக சட்டசபை மீண்டும் நாளை கூடுகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் சட்டசபை நாளை கூடுகிறது.

சட்டசபை கூடியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கற்குறிப்பு வாசிக்கப்படுகிறது. கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து, வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்படுகிறது.

சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்ய உள்ளது. இதற்கான கூட்டம், சபாநாயகர் அறையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டசபை கட்சிகளின் தலைவர்கள், கொறடாக்கள் பங்கேற்கிறார்கள். வரும் 15, 16 மற்றும் 17 ஆகிய 3 நாட்கள் அவை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சட்டசபை கூட்டத்தொடரில் காசா போர் நிறுத்தம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்குவதால் இந்த கூட்டத்தில் காரசார விவாதத்திற்கு பஞ்சம் இருக்காது.

Tags:    

மேலும் செய்திகள்