எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களிடையே குழப்பம் உள்ளது: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

பினராயி விஜயன், மம்தா பானர்ஜி ஆகியோரும் எஸ்.ஐ.ஆரை தீவிரமாக எதிர்க்கிறார்கள் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.;

Update:2025-11-09 14:28 IST

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எஸ்.ஐ.ஆர் குறித்து தனது எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு கூறியிருப்பதாவது:-

எஸ்.ஐ.ஆர் பணிகளை எதிர்க்கவில்லை. ஆனால், அதில் அவசரம் காட்டுவதையே எதிர்க்கிறோம். தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவசர அவசரமாக வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தத்தை மேற்கொள்வது ஏன்? தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், இதை அவசர அவசரமாக செய்வது சரியாக இருக்காது என்பதே நமது நிலைப்பாடு...தேர்தல் ஆணையத்தோடு கூட்டு சேர்ந்து வாக்காளர் பட்டியலில் பாஜக எப்படியெல்லாம் மோசடி செய்துள்ளது என்று ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் ஏற்கனவே விளக்கியுள்ளார். பினராயி விஜயன், மம்தா பானர்ஜி ஆகியோரும் எஸ்.ஐ.ஆரை தீவிரமாக எதிர்க்கிறார்கள். எஸ்.ஐ.ஆர் அறிவித்த உடனேயே இது சதி என்று நாமும் எதிர்த்தோம்.

அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி தீர்மானம் கொண்டு வந்தோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். எஸ்.ஐ.ஆருக்காக வழங்கப்படுகிற கணக்கீட்டு படிவத்தில் எத்தனை குழப்பங்கள் இருக்கின்றன என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கும் அந்த படிவத்தை கொடுத்து இருக்கிறார்கள்.

உங்களிலிருந்து சிலரின் கைகளிலும் இந்த படிவம் இந்நேரம் வந்து சேர்ந்திருக்கும். முதலில் இந்த படிவத்தில் நமது விவரங்களை கேட்டிருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக முந்தைய வாக்காளர் திருத்தப்பட்ட பட்டியலில் உள்ள வாக்காளர் உறவினர் பெயர் கேட்கப்பட்டுள்ளது. உறவினர் என்றால் யார்? அப்பாவா? அம்மாவா? அண்ணனா? தங்கையா? கணவனா? மனைவியா? பிள்ளைகளா? யார்? எல்லாருமே தானே வாக்காளர் பட்டியலில் இருப்பார்கள்.

இதில் ஏதாவது தெளிவு உள்ளதா? வாக்காளர் உறவினர் பெயர் என்று சொல்லப்பட்டிருக்கும் இடத்தில் முதலில் பெயரும் பிறகு வாக்காளரின் அடையாள அட்டை எண்ணும் கேட்கப்பட்டுள்ளது. மூன்றாவது, மீண்டும் உறவினர் பெயர் கேட்கப்பட்டுள்ளது. முதலில் யாருடைய பெயரை எழுத வேண்டும்? எந்த வாக்காளர் விண்ணப்பிக்கிறாரோ, அவர் பெயரா அல்லது உறவினர் பெயரா? சிறிய தவறு இருந்தால் கூட தேர்தல் ஆணையம் அந்த படிவத்தை ஏற்றுக்கொள்ளாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கும் ஆபத்தும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்