விஜய் கூட்டத்தில் கல் வீச்சு எதுவும் இல்லை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம்
கரூரில் விஜய் பிரசாரம் செய்த போது கல் வீச்சு எதுவும் நடைபெறவில்லை என்று சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.;
கரூர்,
சட்டம் ஒழுங்கு ஏடிஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“சம்பவம் நடந்ததும் முதலமைச்சர் உடனடியாக கரூர் வந்தார். எந்த அமைப்பாக இருந்தாலும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தந்தால்தான் போதிய பாதுகாப்பு தர முடியும். விஜய் பிரசாரத்திற்கு மொத்தம் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தவெக கூட்டத்தில் கல் வீச்சு சம்பவம் எதுவும் இல்லை. விதிகளின்படியே காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். கரூர் ரவுண்டானாவிற்கு விஜய் வரும் போதே 6 மணி ஆகிவிட்டது. போதிய ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சம்பவம் அறிந்ததும் ஆம்புலன்ஸ் வந்தது” என்றார்.
முன்னதாக, கரூர் கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியின் இல்லத்திற்குச் சென்று தவெக சார்பில் முறையீடு செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை செய்ய உத்தரவிட கோரிக்கை வைத்தனர். மேலும், கூட்டத்தில் கற்கள் வீசப்பட்டன என்றும் திட்டமிட்டு சதி நடந்துள்ளது என்றும் தவெக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவல்துறை மேற்கண்ட விளக்கத்தை அளித்துள்ளது.