திருமலாபுரம் அகழாய்வு: 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரும்பு பொருட்கள் கண்டெடுப்பு

ஆதிச்சநல்லூரில் கிடைத்தது போன்ற ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.;

Update:2025-10-14 01:54 IST

தென்காசி,

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு செய்யப்பட்டுள்ளன. அங்கு மண்பாண்டங்கள், மனிதர்களின் எலும்புகள், கலைநயமிக்க செம்பு பாத்திரங்கள், தங்க அணிகலன்கள் கிடைத்தன. இறந்தவர்களை புதைக்கும் ஈமத்தாழிகளில், நெற்கதிர், மலை, ஆமை உள்ளிட்ட ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஆதிச்சநல்லூர் தொல்பொருட்கள் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனவும், சிவகளை தொல்பொருட்கள் 3,300 ஆண்டுகள் பழமையானவை எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா திருமலாபுரத்தில் தொல்லியல் இயக்குனர் வசந்தகுமார், துணை இயக்குனர் காளீஸ்வரன் தலைமையிலான குழுவினர் ஈமக்காட்டு அகழாய்வில் ஈடுபட்டிருந்தனர். இதில் ஆதிச்சநல்லூரில் கிடைத்தது போன்ற ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. முக்கியமாக, கருப்பு-சிவப்பு வண்ணங்களில், ஒரே மாதிரியான வடிவில் மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. இங்கும் ஆதிச்சநல்லூர் தாழியில் உள்ளது போலவே கழுதை புலி, நரி, மனிதன், மலை முகடு, ஆமை உள்ளிட்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூரில் ஒரு ஈமத்தாழிக்கு அருகே, 6.25 அடி நீளமுள்ள இரும்பு ஈட்டி, தங்க நெற்றிப்பட்டம் கிடைத்தன. அதேபோல் திருமலாபுரத்திலும் 8 அடி நீளமுள்ள இரும்பு ஈட்டி, நீளமான வாள், இரண்டு பட்டை பாதாள கரண்டி, கழுத்தில் அணியும் தங்க வளையம் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட தாமிரபரணி நதிக்கரை நாகரிகத்துக்கு சமகாலத்தில், திருமலாபுரத்திலும் அதே கலாசாரத்தை பின்பற்றிய மக்கள் வாழ்ந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்