திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல; சமணர் காலத்து தூண் - கோவில் தரப்பு வாதம்

தீபம் ஏற்றுவது தொடர்பாக கோவில் நிர்வாகத்திற்கே முழு உரிமை உள்ளது என்று மதுரை ஐகோர்ட்டில் வாதிடப்பட்டது.;

Update:2025-12-15 13:53 IST

மதுரை,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடந்தது.

அப்போது கோவில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடியதாவது:- “100 வருடங்களாக உச்சிப்பிள்ளையார் கோவிலில் தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இது சரியான இடம் என்று அர்ச்சகர் உறுதி செய்துள்ளார். அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பின் ஏன் இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும்?. கோவில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்கும்.

கோவிலில் பாரம்பரியமான பழக்க வழக்கங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், ஐகோர்ட்டில் நேரடியாக மனு தாக்கல் செய்து நிவாரணம் பெற முடியாது. உரிமையியல் நீதிமன்றத்தால் தான் மனு தாக்கல் செய்ய முடியும். தீபம் ஏற்றுவது தொடர்பாக கோயில் நிர்வாகத்திற்கே முழு உரிமை உள்ளது; கோயில் நிர்வாகத்திற்கு சட்டவிதிகள் உள்ளன; தனிநபர் உரிமையை நிறைவேற்ற முடியாது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தை பொறுமையுடனும், கவனமாகவும் அறநிலையத்துறை தேவஸ்தானம் கையாள நினைக்கிறது. 100 ஆண்டுக்கு மேல் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நடைமுறை ஆகம விதிப்படி நடக்கிறது; தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோயிலை கட்டாயப்படுத்த முடியாது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல; சமணர் காலத்து தூண். சமண முனிவர்கள், இரவில் ஒன்று சேர்ந்து கலந்தாலோசிப்பதற்காக தூண் வைக்கப்பட்டு வெளிச்சத்திற்காக அங்கு விளக்கேற்றி உள்ளனர்; இது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான தூண் அல்ல என்று வாதாடினார்.

அதனை தொடர்ந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், “திருப்பரங்குன்றம் போல் மதுரையின் சமணர் மலை, மேலூர் என பல மலைகளின் உச்சியில் தூண்கள் உள்ளன. வரலாற்று ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி சமண தூண்கள் குறித்து பல தகவல்களை கூறியுள்ளார் என தெரிவித்தார்.

அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள் “சமணர்கள் பழமையானவர்கள், அவர்கள் விளக்கு ஏற்றத்தானே தூணை பயன்படுத்தி உள்ளார்கள்; சில புத்தகத்தில் அது விளக்கேற்றும் தூண் என குறிப்பிடப்பட்டுள்ளதே? என கேள்வி எழுப்பினர். அதற்கு நிலா வெளிச்சத்தை தாண்டி சமணர்கள் தங்கும் இடத்தில் வைக்கப்பட்ட வெளிச்சத்திற்கான தூண்களே, மதுரையின் அனைத்து மலைகளிலும் சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன என வக்கீல் தெரிவித்தார.

தொடர்ந்து தர்கா தரப்பில் வாதாடியதாவது:- “திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மத நல்லிணக்கம், அமைதி, சட்டம்-ஒழுங்கு என எதுவுமே கவனிக்கப்படவில்லை. எந்த விதமான கருத்துகளையும், சட்ட விதி முறைகளையும் பின்பற்றவில்லை. தனி நீதிபதி, தனது உத்தரவுகளில் கோயில் ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும், மலை மீதுள்ள நிலங்களை தர்கா ஆக்கிரமித்தது போன்று, உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.

பழக்கவழக்கங்களை மாற்றுவதற்கு இதுபோன்ற மனுக்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது. இவ்வழக்கு விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை. எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவே கருதுகிறோம். என்று வாதாடினார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்