திருப்பரங்குன்றம் விவகாரம்: டிச.13ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த அனுமதி
மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் அல்ல, சர்வே கல் (நில அளவை கல்) என கனிமொழி எம்.பி. கூறினார். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன.;
மதுரை,
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. ஆனால், தீபத்தூணுக்கும், மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கும் குறைந்த இடைவெளி இருப்பதாகவும், எனவே சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இதனால் கோவில் சார்பில், திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரி தொடர்ந்த வழக்கில், இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீப திருநாளில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அன்ைறய தினம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில்தான், கோவில் சார்பில் தீபம் ஏற்றப்பட்டது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் அல்ல, சர்வே கல் (நில அளவை கல்) என கனிமொழி எம்.பி. கூறினார். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்த பிரச்னையில், ஐகோர்ட்டு உத்தரவிட்டும் அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஐகோர்ட் மதுரைக்கிளையில் விசாரணையில் உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இத்தைய சூழலில், திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, அந்த ஊர் மக்கள் சார்பில், டிசம்பர் 13ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி, மதுரை ஐகோர்ட்டில் திருப்பரங்குன்றம் ஊர் மக்கள் சார்பாக இரா.பிரபு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 50 பேர் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட சன்னதி தெருவில் காலை 9 முதல் 5 மணி வரை உண்ணாவிரத இருக்க வேண்டும், அரசியல் பேசக்கூடாது என நிபந்தனை விதித்து, அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.